Type Here to Get Search Results !

சசிகலா விடுதலை : தமிழக அரசியலில் அனல் பறக்கும் | ஜெயலலிதா சமாதியில் இருந்து தனது அரசியல் ஆட்டம் #Sasikala #AIADMK #AMMK

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகப் போகிறார். இன்னும் சில நாட்கள்தான் இருக்கு அப்புறம் பாருங்க எங்க ஆட்டத்தை என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். சசிகலா விடுதலைக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க மாட்டார் என்று ஸ்டாலின் சர்ச்சையை கிளப்பி வருகிறார். 




இப்போது மட்டுமல்ல சனவரி 27-ம் தேதிக்குப் பிறகும் எனது தலைமையில் ஆட்சிதான் நடைபெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் முதல்வர் பழனிச்சாமி. சிறை சென்ற சசிகலா ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்றாலும் கட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறாராம். என் காலத்திற்குப் பிறகும் 200 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருக்குமென்று சட்டசபையில் சபதம் செய்தார் ஜெயலலிதா. அவரது மரணத்திற்குப் பிறகு முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சசிகலாவுக்கு அதிமுகவின் பொதுச்செயலாளராக மகுடம் சூட்டபட்டது.


அதோடு நிற்காமல் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற ஆசையில் ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். இதனையடுத்து ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்து மவுன யுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.



அதிகார போட்டியில் கட்சி உடைந்தது. சசிகலா தலைமையில் பெரும்பாலான  எம்எல்ஏக்கள் செல்ல, ஓ.பன்னீர் செல்வம் பக்கம் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே சென்றனர். முதல்வராக ஆக இருந்து சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு மூலம் தண்டனை வந்தது. கோட்டைக்கு முதல்வராக இருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் இருந்தது.


சிறை செல்லும் முன்பாக எம்எல்ஏக்கள் ஒன்று கூடி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். கூவாத்தூர் ரிசார்ட்டில் நடந்த கலாட்டாக்களை அவ்வளவு  எளிதாக யாரும் மறந்து விட முடியாது. சசிகலா சிறைக்கு போன சில மாதங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஒன்றாக இணைந்தனர். டிடிவி.தினகரன் தனித்து விடப்பட்டார்.


சசிகலாவின் ஆசியுடன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்தார். அவரை நம்பி சென்ற எம்எல்ஏக்கள் ஒருவர் கூட ஜெயிக்கவில்லை. பணத்தையும் பதவியையும் இழந்ததுதான் மிச்சம். இபிஎஸ்., ஓபி.எஸ்,.  தீவிரமாக எதிர்த்த கரூர் செந்தில் பாலாஜியும், தேனி தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்து தங்களின் பணத்தை பாதுகாத்துக்கொண்டனர்.




4 ஆண்டுகால சிறை தண்டனை பெற்ற சசிகலா 27-ம் தேதி  விடுதலையாகப் போகிறார். அவரது விடுதலை உறுதியாகிவிட்டது. அதிமுகவில் சசிகலாவை எப்போதும் சேர்க்க மாட்டோம் என்று முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டமாக  கூறிவிட்டார். அதே நேரத்தில் சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் சில மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளதாக மன்னார்குடி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.


சசிகலாவின் சதுரங்க விளையாட்டு

 

அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்று சசிகலா விரும்புகிறாராம். தங்களை நம்பி வந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் சசிகலா நினைக்கிறாராம். சசிகலாவின் திட்டம் எல்லாமே அதிமுகவை முதலில் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறதாம். அந்த எண்ணத்தில்தான் தற்போது சில நிபந்தனைகளை விதித்திருக்கிறாராம்.




கூட்டணிகள்  முடிவு 


முதல்வர் வேட்பாளராக தற்போது எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயற்குழு,பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை செயற்குழு பொதுக்குழு கூடிதான் முடிவு செய்யும் என்றும், கூட்டணியையும் அவ்வாறே முடிவு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம் சசிகலா. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல் செக் வைத்துள்ளார்.


அதிமுகவில் இரட்டை தலைமை சரிவராது  


அதிமுகவில் இப்போது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை உள்ளது. அதனால் அந்தப்  பதவிகளை நீக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு செக் வைத்திருக்கிறார்.


சசிகலாவின் முக்கியமான  திட்டம் 

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாராம் சசிகலா. இதன்மூலம் மீண்டும் பொதுச்செயலாளராக போட்டியிடலாம் என்பது சசிகலாவின் திட்டமாக உள்ளது.

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள  வழிகாட்டுதல் குழுவை கலைக்க வேண்டும் என்பது சசிகலாவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு அதே பழைய பதவிகளை கொடுக்க வேண்டும் என்பதும் மிக முக்கிய நிபந்தனையாகும்.


சின்னம் சம்மந்தமான வழக்குகள் வாபஸ் பெறுவது


அதிமுக, அமமுக  இரு தரப்பிலும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், என்பதும் சசிகலாவின் நிபந்தனையாக உள்ளது. அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு வந்தவர்களுக்கும் பதவி தர வேண்டும். யார் யார் எந்த தொகுதியில் போட்டியிட்டார்களோ, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்றும் கட்சி பதவிகளையும் தரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம்.




சசிகலா நிபந்தனைகள்  செல்லுபடியாகுமா? 


சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவே மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். விடுதலையாகும் முன்பே பல நிபந்தனைகளை விதிக்கும் சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின்னர் மறந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் இருந்து தனது அரசியல் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பார் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.


சசிகலாவினால்  தமிழக அரசியலில் அனல் பறக்கும்  

சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு  தமிழக அரசியலில் அனல் பறக்கும் பல தரமான சம்பவங்கள் அரங்கேற காத்திருக்கிறது. அத்தனை வேடிக்கைகளையும் திருவாளர் பொதுஜனமும் வாக்காளர்களும் காண காத்திருக்கின்றனர். எது எப்படியோ வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைய ஆச்சரியத்தையும் அதிசயங்களையும் போகிறது என்பது மட்டும் உண்மை. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies