சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்ககோரி சசிகலாவின் வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சிகள் பயளிக்கவில்லை. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விடுதலை தள்ளிப் போனது. சனவரி 27ஆம் தேதிதான் விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது என சிறைத்துறை நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளித்த நிலையில் அந்த நாளே உறுதியாகியுள்ளது.
சனவரி 27ஆம் தேதி கர்நாடக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதி என்றும், அதற்கான அலுவல் ரீதியான கடிதம் கிடைத்துவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 5ஆம் தேதி இளவரசி விடுதலையாவது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், சுதாகரன் விடுதலை குறித்த எந்த விவரத்தையும் சிறைத்துறை நிர்வாகம் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சசிகலா விடுதலையாக இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடாகியுள்ளது. இந்நிலையில் சசிகலாவை விடுதலைக்கு முன்பு சந்திக்க அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் என முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் சசிகலா, டிடிவி.தினகரன் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கூறினார்.
அதிமுகவிலேயே சசிகலா இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும், அவர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் சசிகலா மூலமாகவே அந்தப் பதவிகளை அடைந்தனர் என சசிகலா ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். விடுதலையான பிறகு யாரெல்லாம் சசிகலாவிடம் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அரசியல் நகர்வுகள் இருக்கும் என்பது உறுதியாகிறது.