கோவையில் திமுக நடத்திய கிராம சபை கூட்டத்தில் தலித் பெண் ஒருவரை தாக்கப்பட்ட சம்பவத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி தலித் அமைப்புகளின் தலைவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, அந்த பெண்ணை கூட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பூங்கொடி மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் பூங்கொடியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பூங்கொடியை பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும், இன்று ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனர் கல்யாண சுந்தரம் தலைமையில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பூங்கொடியை சந்தித்து ஆறுதல் கூறி, அவருக்கு நிதி உதவியும் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் மு.க.ஸ்டாலின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெளியே வந்த அவர்கள் ஸ்டாலினின் உருவப்படத்தை கிழித்து, திமுகவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.