சேர்த்தால் உதயம். தவிர்த்தால் அஸ்தமனம். ஐ-பேக் தேவையில்லை. ஆட்சி அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும். என அழகிரியின் பிறந்தநாளுக்காக அவரது ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, மதுரையிலுள்ள பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். நடந்த கூட்டத்தில், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குறித்தும், அவர் எப்போதும் முதல்வராக வரமுடியாது என்றும், தான் என்ன முடிவெடுத்தாலும் அதை ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்கத் தயாராக இருங்கள் என்றும் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மு.க.அழகிரியின் பிறந்தநாள் ஜனவரி 30ஆம் தேதி வரஉள்ள நிலையில், மதுரையில் அவரது ஆதரவாளர்கள், ஐ-பேக் தேவையில்லை. தமிழகத்தில், ஆட்சி அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும் என்றும் சேர்த்தால் உதயம், தவிர்த்தால் அஸ்தமனம் என மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


