Type Here to Get Search Results !

தேர்தலில் வாக்குக்காக பெண்களை இழிவுபடுத்துவதற்கு கண்டனம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக கீழ்த்தனமான அரசியல் செய்வதோடு, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் எங்கள் பெண்களை திமுக இழிவுபடுத்துவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது   என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


பெண்களை இழிவாக பேசிவரும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், பெண்களுக்கு பாலியில் தொந்தரவு கொடுத்த சூலூர் திமுக ஒன்றியசெயலாளரை கண்டித்தும், திமுக மக்கள் சபை என்ற பெயரால் பங்கேற்ற பெண்ணைத் தாக்கியதற்கு காரணமாக இருந்த மு.க.ஸ்டாலினை கண்டித்தும் பொள்ளாச்சியில் அதிமுக மகளிரணி சார்பில் நேற்று இரவு ( திங்கள்கிழமை ) பொதுக்கூட்டம் நடைபெற்றது.    


கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக செய்தித்தொடர்பாளர் வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நடிகை விந்தியா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், யாராக இருந்தாலும் சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கும். ஆனால், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பொள்ளாச்சி சேர்ந்த  200 பெண்கள் பாதிக்கப்பட்டதாக ஸ்டாலின் கூறுவது, பொள்ளாச்சி பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்கள் யாராவது தவறு செய்தால், உடனடியாக கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், திமுக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு இருந்து, போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதில்லை.

இதில், எந்த ஆதாரமும் இல்லாமல், அரசியலில் சுயலாபம் தேடவும், ஓட்டுக்காகவும், பாலியல் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. பொள்ளாச்சி பெண்களையும், கலாசாரத்தையும் இழிவுபடுத்துவதை திமுகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டசபை தேர்லில், கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும், அதிமுக வெற்றி பெறும்; திமுகவின் பொய் பிரசாரம் எடுபடாது. இவ்வாறு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கும் என் மகனுக்கு இதில், தொடர்பு இருப்பதாக சிறு ஆதாரத்தை கொடுத்தால், என்னுடைய, ஐம்பது  ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு விலகிக்கொள்கிறேன். இதை நிரூபிக்காவிட்டால், திமுக தலைவர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலின் விலகத்தயாரா?  என்று  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சவால் விடுத்துள்ளார்.

பொள்ளாச்சியில், திமுகவினரை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

எனது மகனை, பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி, திமுகவினர் பேசி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை, காவல்துறையிடம் புகார் கொடுக்க கூறியதே நான் தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால், நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தேன்.

அப்போது, என் பெயரையும், எனது மகன் பெயரையும் இந்த வழக்கில் தொடர்புபடுத்தி பேச மாட்டேன் என, ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். இப்போது, மறுபடியும் பேசி வருகிறார்.

பாலியல் வழக்கு சம்பந்தமாக என் மகனுக்கு தொடர்பு இருப்பதாக சிறு ஆதாரத்தை கொடுத்தால், என்னுடைய, 50 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு விலகிக்கொள்கிறேன். அவ்வாறு, நிரூபிக்காவிட்டால், திமுக தலைவர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகத்தயாரா? பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஓட்டு சேகரிக்கும் திமுகவின் தந்திரம் இங்கே பலிக்காது. என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க., இலக்கிய அணி செயலாளர் வளர்மதி, அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சே.தாமோதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கஸ்தூரிவாசு, எட்டிமடை சண்முகம்,ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ஜுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், மகளிரணி செயலாளர் கண்ணம்மாள்  கலந்துகொண்டனர்.     

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies