சசிகலா விடுதலை குறித்து எடப்பாடி பழனிசாமி; நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றிய விவகாரம் கட்சிக்குள் எழுந்ததை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு சாதகமாக சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில், ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் ஒருமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் அதை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் கூட்டணியில் தொடர்வார்கள் என்றும் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. இதே போல் சசிகலா வருகை குறித்தும் பொதுக்குழுவில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பற்றி விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில், அதிமுக வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்த போது, இது குறித்த மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.
பொதுக்குழு நடந்தபோதே வி.கே.சசிகலா விடுதலை குறித்து பேச ஓ.பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டியதாகவும் ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும், அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. பொதுக்குழு முடிந்த அன்று இரவு 7.30 மணியளவில் அதிமுக தலைமை அலுவகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, கழக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் வி.கே.சசிகலா விடுதலையாகி வெளியே வருவது கட்சியில் தாக்கம் ஏற்படுத்துமா, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில், வைத்தியலிங்கம், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் வி.கே.சசிகலா வெளியே வந்தாலும் அவரோடு செல்ல யாரும் தயாராக இல்லை. அவர் வெளியே வந்த பின்னரும் அரசியல் செய்ய முடியாது. பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பேசினர்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “சிலர் விடுதலையாகி வருவார்கள். அவர்கள் பின்னே செல்லலாமென சிலருக்கு சபலம் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களை கழக மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம், அதிமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதை, ஒரு பட்டியலை மாவட்டச் செயலாளர்கள் தயாரித்து விரைவில் அளிக்க வேண்டும் என்று அந்த ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.