பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய கனிமொழி எம்.பி., பொள்ளாச்சி போராட்டத்தை தடுக்க ஆளுங்கட்சியினர் முயன்றனர். இந்த போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று தளபதி எச்சரிக்கை விடுத்ததால், காவல்துறை பணிந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பலில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். எத்தனை பெண்கள் இதில் பாதிக்கப்பட்டனர் என்பதை விசாரிக்க வேண்டும். அதிமுகவினருடனான ஆதாரங்கள் தொடர்ந்து வலம் வந்துகொண்டுள்ளது. அதிமுகவின் முக்கிய பொறுப்பிலிருக்கும் பல பேரை காப்பாற்றவே அருளானந்தத்தை காப்பாற்ற துடிகின்றனர்.
எந்த அளவிற்கு இந்த விசாரணையை தடுத்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தட்டி கேட்கவில்லை என்றால், பெண்களை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், நாதியில்லை என்ற நினைத்து விடுவார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் நிச்சயமாக கிடைக்க வேண்டும். ஏதோ பேருக்காக 10 பேரை கைதுச் செய்வதை ஏற்க முடியாது; பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்'.
எங்கள் மீது எந்த வழக்குகள் போட்டாலும் நாங்கள் நீதி விசாரணைக்காக போராடுவோம். யாராக இருந்தாலும் இந்த வழக்கில் தொடர்புடையஅவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் வர உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், நீதியின் முன்பு, சட்டத்தின் முன்பு கொண்டு வருவோம்.” என்று பேசினார்.
இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் வாசுகி, ராதிகா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேபோல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.