தென் மாவட்டங்களில் நாளைவரை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்தி அறிக்கையில், இலங்கை மற்றும் குமரிக்கடல் ஒட்டிய பகுதியில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில், மழை அல்லது கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தற்போது தூத்துக்குடி , ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல், மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கன மழை பெய்யும். நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், கன மழை, மிக கன மழை பெய்யும்.
தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். தென்மேற்கு வங்கக் கடல், குமரி கடல், லட்சத்தீவு, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், வருகிற 13ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 29 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், திருவாடானையில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. மணமேல்குடி, ஆர்.எஸ் மங்களம் 6 செ.மீ., தொண்டி, சாத்தான்குளம் 5 செ.மீ., பீளமேடு, மணிமுத்தாறு 4 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.