மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவகம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு வழங்குவதற்காக அடுத்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வருகிற பிப்ரவரி மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா இருக்கும் என தெரிகிறது. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் அதிமுகவினர் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்திருந்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்காக ரூ.50 கோடி மதிப்பில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவிலான பிரம்மாண்ட நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக படிபடியாக நடைபெற்ற வந்த கட்டுமானப் பணிகள், இப்போது தான் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடம் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது.
வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்பதால், அதற்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும் என விரும்புகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால், பிப்ரவரி மாதமே ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்து வைக்கப்படும் எனத் தெரிகிறது. பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது .குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என விரும்பும் அதிமுக தலைமை, அதற்கான அழைப்பு பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதற்காக முதல் கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தவாரம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டி அழைப்பு விடுக்கவுள்ளார்.