சனவரி 27லில் சசிகலா விடுதலை: சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு
விடுதலையாகி வெளியே வரும் வி.கே.சசிகலாவுக்கு, கர்நாடகம்-தமிழ்நாட்டு எல்லைப்பகுதியான, ஓசூர் "ஜூஜூவாடி"யில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்காக, அமமுக கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு பெங்களூரு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, மூன்று பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சிறையில் இருக்கும்போது, வி.கே.சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் நீடித்தது.
இதுபற்றி, நரசிம்ம மூர்த்தி சமூக ஆர்வலர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலின்படி, வி.கே.சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், செலுத்தவேண்டிய அபராதத் தொகை செலுத்திவிட்டால், சனவரி 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் அபராத தொகை வி.கே.சசிகலா செலுத்தினார். இதையடுத்து வரும் சனவரி 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலை ஆவது உறுதியாகியிருக்கிறது.
இதனால், விடுதலையாகி வரும் வி.கே.சசிகலாவுக்கு கர்நாடகம்-தமிழ்நாட்டு எல்லைப்பகுதியான, ஓசூர் "ஜூஜூவாடி"யில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்காக, அமமுக கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.
பெங்களூரிலிருந்து, தமிழ்நாட்டு எல்லைப்பகுதிக்கு வந்துசேரவே, இரவுநேரம் ஆகும் என்பதால், வி.கே.சசிகலா, ஓசூரில் உள்ள தனியார் விடுதி அல்லது சூளகிரி அருகிலுள்ள ஓட்டலில் தங்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான பணிகளை, அமமுக கட்சியின் நிர்வாகிகள் விடுதிகளை பார்வையிட்டு, புக்கிங் செய்திப்பதாக உளவு பிரிவு போலீசார், தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வி.கே.சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும் அமமுக நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிலுள்ள பிரபலமான ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர்.
ஓசூரில் 27ஆம் தேதி இரவு தங்கி விட்டு, 28ஆம் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வந்து அடைகிறார். வரும் வழியில் அவருக்கு 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுபற்றி, அமமுக கட்சியினர் சிலர் கூறுகையில், சசிகலா வரும் 27ஆம் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு, மறுநாள் 28ஆம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்கின்றனர்.