மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் 73 ஜோடிகளுக்கு 'அம்மா' சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் செய்துவைப்பதற்கான கால்கோளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாட்டினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா, வருகிற 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையை முன்னிட்டு, அதிமுக சார்பில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 73 ஜோடி மணமக்களுக்கு 73 வகையான 'அம்மா' வீட்டு சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தப்பட உள்ளது.
இதற்கான, கால்கோள் நாட்டுவிழா பேரூர் செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விழாவிற்கான கால்கோள் நாட்டினார். இதனை தொடர்ந்து, போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் நிதிக்கான காசோலையை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: ஆண்டு தோறும் முன்னாள் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு 73 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சி கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடத்தபட்டு வருகிறது.
— SP Velumani (@SPVelumanicbe) January 25, 2021
பிப்ரவரி 15-ல், நடைபெறவிருக்கும் இந்த திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளயிருக்கிறார்கள்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஆட்சியில் வழங்கபட்ட நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. அனைத்து மக்களும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூறுகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தவுடனே வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்கு கடந்த இரண்டு நாட்களாக கோவையில் முதலமைச்சர் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மக்களே சாட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.