Type Here to Get Search Results !

பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்...! மறுநாள் உயிர்தெழுவர் என பூஜை...! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இரண்டு மகள்களை நன்கு படிக்க வைத்த பெற்றோரே நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர்கள் புருஷோத்தம் நாயுடு-பத்மஜா தம்பதியினர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மூத்த மகள் அலேக்யா 27வயது  மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ்  படித்து வந்தார். சாயி திவ்யா 22வயது  ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார்.




கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நடத்துவதாக கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு வீட்டில் பூஜைகள் செய்தபடி முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அடித்து கொலை செய்து பூஜைகள் செய்துள்ளனர். வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கல்லூரி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.




இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ரவிமனோகராச்சாரி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளனர். 



இந்நிலையில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். எதனால்  இவ்வாறு செய்தார்கள் என்று தெரியாத நிலையில், போலீசார் மற்றும் உறவினர்களை கூட அவர்கள் வீட்டிற்குள் உள்ளே வரவிடாமல் தடுத்து வருகின்றனர்.




தங்கள் மகள் மீண்டும் எழுந்து வருவார்கள் ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். வீட்டில் இருந்த  சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து உண்மை நிலவரத்தை கண்டறிய தொடர்ந்து அவர்களுடன் பேச்சு கொடுத்து வருகிறோம் என டி.எஸ்.பி. தெரிவித்தார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies