இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
#பேரறிவாளன் #சாந்தன் #முருகன் #நளினி #ராபர்ட்_பயஸ் #ஜெயகுமார்
#ரவிச்சந்திரன்
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு தலைமை வக்கீல் துஷார் மேத்தா, “அரசியல் சட்டம் 161வது பிரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் முடிவெடுத்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினார்கள். இந்த 7 பேரையும் விடுவிப்பதில் கவர்னருக்கு உடன்பாடு இல்லை என்றால், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என்று கூறியுள்ளது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.
7பேரையும் விடுவித்து கவர்னர் கையெழுத்திடுவாரா, அல்லது கோப்புகளை திருப்பி அனுப்புவாரா என்பது 3 நாளில் தெரியவரும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேரறிவாளன் விடுதலை என்பது அரசியலில் ஒரு பெரும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இதுவரை இந்த 7பேரின் விடுதலையை எதிர்த்தும், கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி வந்த மத்திய அரசு, தற்போது இந்தநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் கவர்னருக்கே உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுள்ளதை துஷார் மேத்தாவின் தகவல்கள் உறுதி செய்திருக்கிறது.
இந்தநிலையில், 7பேரை விடுதலை செய்தால்….! இது தான் எங்களின் முடிவு…. தமிழக காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு …!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி ஜன 21., அன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை தமிழகத்திலிருந்து வேரோடு வீழ்ந்தவதற்காக வருகிற 23,25-ஆம் தேதிகளில் மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி பரப்புரையை தொடங்குகிறார்.
அரசியல் கட்சிகளுக்குள் சில வேறுபாடுகள் இருந்தாலும் மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் அனைவரும் ஒன்றாக கூட்டணியில் பயணிக்கிறோம். சசிகலா விடுதலையாகி வந்தாலும் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. கமலஹாசனின் கட்சி இன்றளவிற்கு ஒரு மழலை கட்சி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தால் அதில் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார்.