தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் கியாஸ் சிலின்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். ஆனால், தற்போது கியாஸ் சிலிண்டர் பெற, முன்பதிவு செய்த 3 நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ஒரு கியாஸ் சிலிண்டர் மட்டுமே வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கியாஸ் தீர்ந்ததும், முன்பதிவு செய்து, புதிய சிலிண்டர் வரும் வரை பெரும் சிரமப்படுகிறார்கள். இவர்களுக்காக முன்பதிவு செய்த உடனே கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்ய தட்கல் என்ற முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, தட்கல் முறையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த நாளிலேயே அவர்களின் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும். அதாவது, 'எல்பிஜி சேவா' மூலமாக தட்கல் முன்பதிவு செய்த, அரைமணி நேரத்தில் வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வந்துவிடும்.
ஆனால், தட்கல் முறையில் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தட்கல் முறையை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எண்ணை நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.