சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தொடங்கியது. ஒன்றரை மணிநேரம் இரு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்துவந்த நிலையில், அந்த நடைமுறை தற்போது முடிவடைந்திருக்கிறது.
சித்ராவின் உடற்கூராய்வு முடிந்துவிட்டதால், உடல் அவரது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டு, கோட்டூர்புரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஊர்வலமாக எடுத்து சென்று பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு முடிவுகளை வைத்து விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாலும், சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் ரவி மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். அவருடன் ஹோட்டல் அறையில் இருந்த ஹேமந்த், சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சித்தரா - ஹேம்நாத் வில்லாவில் தான் தங்கி உள்ளனர். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஹேம்நாத் உடன் ஹாலில் பேசிக் கொண்டிருந்தார். நடிகை சித்ரா பதற்றமாக பேசிக் கொண்டிருந்த போது குளித்துவிட்டு வருவதாக கூறி அறையை தாழிட்டுள்ளார். அதன் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் அறையை திறக்கவில்லை என்பதால் ஹோட்டல் ஊழியர்களை வைத்து மாற்று சாவி கொண்டு அறையை திறந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி வரும் நிலையில், பிரபல ஹோட்டலில் சிசிடிவி கேமரா சரியாக செயல்படாமல் இருப்பது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.