பொள்ளாச்சி. டிச.12.
பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லை கோபாலபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி ரூ. 50 ஆயிரத்து 200 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழக- கேரள எல்லையான கோபாலபுரத்தில் அமைந்துள்ளது வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி.
பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியே தினசரி நூற்றுக்கணக்கான லாரிகள், டெம்போ மற்றும் ஆட்டோக்களில் பொருட்கள் கேரளாவிற்கும், அதேபோல் கேரளாவில் இருந்து கோபாலபுரம் வழியாக தமிழகத்திற்கும் வருகின்றன.
இந்த வாகனங்களுக்கு இந்த சோதனைச்சாவடியில் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாக புகார் இருந்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ், ஆய்வாளர்கள் எழிலரசி, பரிமளாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் குழு கோபாலபுரம் சோதனை சாவடியை தொடர்ந்து மாறுவேடத்தில் வந்து கண்காணித்து உள்ளது.
அப்போது லாரி ஓட்டுநர்கள் இடம் கூடுதல் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதை அடுத்து சனிக்கிழமை அதிகாலை ஆர்டிஓ சோதனை சாவடிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கணக்கில் கணக்கில் வராத ரூ. 50 ஆயிரத்து 200 தொகை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில், அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த், இடைத்தரகர் அம்ராம்பாளையத்தை சேர்ந்த நாசர் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


