பிகார் மாநிலத்தை ஆளப்போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
மூன்று கட்டமாக நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் இந்தியாவின் முதலாவது மாநிலமாக பிகார் விளங்குகிறது.
மாலை 4.30 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் 'மகாகட்பந்தன்' 99 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதுவரை இரு தொகுதிகளின் முடிவுகள் மட்டுமே அலுவல்பூர்வமாக வெளியாகியுள்ளன. அவற்றில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றுள்ளன.
243 தொகுதிகள் உள்ள பிகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை அமைக்க 122 இடங்கள் தேவை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து தனியாகப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி இரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், ரகோபூரில் முன்னிலையில் இருக்கிறார்.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க செவ்வாய்க்கிழமை மாலைக்கு மேல் ஆகலாம் என்று அம்மாநில தேர்தல் அதிகாரி ஹெச்.ஆர். ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
பிரிந்து சென்ற கட்சிகளால் தேஜஸ்விக்கு சேதாரமா?
இதேவேளை, லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அவரது ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை மகா கட்பந்தன் என்று அழைக்கப்படும் பெருங்கூட்டணியை அமைத்தன. இந்தக் கூட்டணி தற்போது பின்தங்கி வருகிறது.
எதிரணியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பதுடன், அந்தக் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான அளவு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இன்னும் இறுதி முடிவு தெரிய சில மணி நேரம் ஆகலாம்.
தேஜஸ்வியின் மகா கட்பந்தன் கூட்டணியில் இருந்து முகேஷ் சாஹ்னியின் வி.ஐ.பி. கட்சி என்று அழைக்கப்படும் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா போன்ற சிறு கட்சிகள் வெளியேறியது ஆர்ஜேடி கூட்டணியை பாதித்திருக்கும் போலத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத் தரவுகளின் படி தற்போது விஐபி கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தக் கட்சியும், அவாமி மோர்ச்சாவும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இந்த தேர்தலில், உபேந்திர குஷ்வாஹாவை முதல்வர் வேட்பாளராக கொண்டு மூன்றாவது அணி அமைந்தது.
யார் யார் போட்டி? யார் யாருடன் கூட்டணி?