வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருக்கிறார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இன்னும் இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில் இன்று மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் கலந்துகொண்டனர். கட்சி தேர்தலை அணுக வேண்டிய முறை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் பேசிய கமல்ஹாசன், "கூட்டணி என்பது என் வேலை. எல்லோரும் வெற்றிக்கு உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன்" என்று குறிப்பிட்டதாக அக்கட்சியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
தி.மு.க. போன்ற கட்சிகளுடன் இந்த முறை மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கலாம் எனப் பேச்சுகள் அடிபட்ட நிலையில் இந்த அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால்தான், அத்தகைய குற்றங்கள் சரி செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவே போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாதேவி தாக்கல் செய்த பதில் மனுவில் 862 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும், மேலும் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல் என்றும், அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த அறிக்கை படித்த நீதிபதிகள் கோபமடைந்து, "இந்த அறிக்கையில் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தவறான தகவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வரியில் ஊழல் அதிகாரிகளை கண்காணிக்க குழு அமைத்து முறைகேடில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினர்.