என் பெற்றோர் யார் என்று எனக்குத் தெரியாது. என் குழந்தை பருவத்தை பெரும்பாலும் வீதிகளில்தான் கழித்தேன். கொஞ்ச காலம் ஆதரவற்றோர் இல்லங்களிலும் இருந்தேன் என்கிறார் 'ஹுசேன் சாகர்' சிவா.
அவருக்கு என்ன வயது இருக்கும் என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. காலப் போக்கில், இவர் ஒரு பெண்மணி மற்றும் அவரின் குழந்தைகளோடு வாழத் தொடங்குகிறார். அவர்களுக்கும் வீடு வாசல் என எதுவும் கிடையாது. அந்த பெண்மணியின் மகன்தான், சிவாவுக்கு நீச்சல் அடிக்க கற்றுக் கொடுக்கிறார்.இன்று அந்த நீச்சல் திறனால், குட்டிப் பிரபலமாக, ஹுசேன் சாகர் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
40 ரூபாய்க்கு முதல் பிணம்
சிவாவுக்கு சுமாராக 10 வயது இருந்த போது, ஒரு ஏரியில் இருந்து பிணத்தை எடுத்துக் கொடுக்க காவல் துறையினரிடம் முன் வந்திருக்கிறார். சிறுவனாக இருக்கிறேன் என காவல் துறையினர் முதலில் மறுத்தனர். நான்தான் அவர்களைச் சம்மதிக்க வைத்தேன் என்கிறார் சிவா. சொன்னபடி குளத்தில் இருந்து பிணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, 40 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். இது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். தற்போது சிவாவுக்கு சுமார் 30 வயது இருக்கும். இன்னமும் காவலர்களுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறார்.
ஹுசேன் சாகர் ஏரி
சிவா, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கும், ஹுசேன் சாகர் ஏரிக்கு அருகில் வாழ்கிறார். இந்த ஏரி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். அதோடு தற்கொலை செய்து கொள்ள பலர் தேர்வு செய்யும் இடமும் கூட. இந்த ஏரியில் விழுந்து இறந்தவர்களின் உடலைக் கொண்டு வருவது மட்டும் சிவா செய்வதில்லை. தற்கொலை செய்து கொள்ள வருபவர்கள், ஹுசேன் சாகர் ஏரியில் குதிப்பதற்கு முன்பே காப்பாற்றி இருக்கிறார். விழுந்த பின்னும், தன் உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றி இருக்கிறார்.
"எத்தன பிணங்களை எடுத்தேன்னு நியாபகம் இலலிங்க, ஆனா 114 பேர காப்பாத்தி இருக்கேன்" என்கிறார் ஹுசேன் சாகர் சிவா. இதை ஹுசேன் சாகர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் தனலட்சுமி ஆமோதிக்கிறார்.
உயிர் பயம் & உடல் உபாதைகள்
ஹுசேன் சாகரில் நீச்சல் அடிப்பது சாதரண விஷயம் அல்ல. ஹுசேன் சாகர் ஏரி, மிகக் கடுமையாக மாசுபட்ட ஏரி. கோடை காலத்தில் மிக மோசமாக துர்நாற்றம் வீசும். இந்த மாசுபட்ட நீரில்தான், சிவா எந்த உபகரணங்களும் இல்லாமல் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணியாமல் குதித்து உயிர்களைக் காப்பாற்றுகிறார்.
இந்த மாசுபட்ட ஏரியில் இறங்குவதால், சிவாவுக்கு சருமம் சார்ந்த பிரச்சனைகள் வந்திருக்கின்றன. கடுமையான டைஃபாய்ட் காய்ச்சல் கூட வந்திருக்கிறது.
ஒருவர் தற்கொலை செய்து கொள்ளக் குதிக்கிறார் என்றால், நீங்களும் உடனடியாகக் குதித்துவிட வேண்டும். அந்த நேரத்தில் பாதுகாப்பு உடைகளை எல்லாம் போட்டுக் கொண்டிருக்க நேரமிருக்காது என்கிறார் சிவா.
இந்த பிரம்மாண்ட ஏரிக்கரைகளும் அத்தனை சுத்தமாக இருக்காது. பாம்புகள் எல்லாம் சர்வ சாதாரணமாக வந்து போகும். இருப்பினும், இந்த பகுதியை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்கிறார் சிவா.
"நான் இங்க இருந்தா தாங்க, என்னால உயிர காப்பாத்த முடியும். ஒரு உயிர காப்பாத்துறதுல இருக்குற திருப்தி இருக்கே, அது ரொம்ப பெருசுங்க," என்கிறார் 'ஹுசேன் சாகர்' சிவா.