ரமேஷ் பிரசாதுக்கு, தினமும் ஏழு கிலோ உருளைக்கிழங்கால் ஆன சமோஸாக்களை விற்று, நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் லாக்டவுன் முடிந்து பல மாதங்கள் ஆகியும், ரமேஷின் கடை முன்பு போல் இல்லை.
இப்போது அவர் அதிகபட்சமாக, இரண்டு கிலோ மட்டுமே சமோஸாக்கள் செய்கிறார் அதுவும் மீந்து விடுகிறது. மக்களிடம் வாழவே பணம் இல்லை என்றால், எங்கே சமோசா வாங்க போகிறார்கள் என்று ரமேஷ் கேட்கிறார்.
லாலு பிரசாத் யாதவ், தீவிர அரசியலில் இருந்தபோது, பிகாரில் ஒரு முழக்கம் இருந்தது - அது, சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை, பிகாரில் லாலு இருப்பார் என்பதுதான்.
ஆனால், இப்போது லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார். அது சமோசா விற்பனையாளர்களை விரக்தி அடையச் செய்திருக்கிறது.
தேஜஸ்வி யாதவ் தொகுதியான ரகோபூரில் உள்ள ரமேஷின் கடை, தேர்தல் நடவடிக்கைகளின் மத்தியிலும் கூட, லாக் டவுனின் முந்தைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை. இந்த கடையில் ரமேஷ் தனது 15 வயது மகனை உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்.
"நிதீஷ்குமார் லாக் டவுன் அமலில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. எங்களது குடும்பத்திற்கு எங்களால் இன்னமும் உணவளிக்க முடியவில்லை என்ற அனுதாபம் யாருக்கும் இல்லை" என்கிறார் ரமேஷ்.
நிதீஷ் குமார் 15 ஆண்டுகள் முதல்வராக உள்ளார், இனி மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்
ராகோபூரில் யாதவ் வாக்காளர்கள் தான் மிக அதிகம். பிஜேபி தனது வேட்பாளர் சதீஷ் ராயை களத்தில் இறக்கியுள்ளது. சதீஷ் ராய் 2010-ல் ராப்ரி தேவியை தோற்கடித்தார், ஆனால் 2015-ல் தேஜஸ்வியிடம் தோல்வியடைந்தார்.
ராகோபூரில் யாதவ் வாக்காளர்கள் 1.25 லட்சம் பேர், அதன் பின் மிக அதிகமாக ராஜபுத் வாக்காளர்கள் சுமார் 40,000 பேர்உள்ளனர் .
ஹஜிப்பூரில் உள்ள பிரபாத் கபர் தைனிக் நாளிதழின் தலைவர் சுனில் குமார் சிங் கூறுகையில், சதீஷ் ராய் இந்த முறை நல்ல வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் ராகேஷ் ரோஷனை எல்ஜேபி வேட்பாளராக நிறுத்தி ஆர்ஜேடிக்கு இதை எளிதாக்கி விட்டார் சிராக் பாஸ்வான்.
ராகேஷ் ரோஷனுக்கு ராஜ்புத், சாதியின் பெயரால் வாக்கு கிடைத்தால், தேஜஸ்வி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.
இங்குள்ள சுனில் குமார்சிங், ராகேஷ் ரோஷன் குறித்து ரகோபூரில் உள்ள ராஜபுத்திரர்களிடையே ஒரு கோஷம் எழுப்பப்படுகிறது. முதலில் குலம்; பின் மலர். அதாவது, முதலில் தனது சாதியின் மரியாதையை காப்பாற்ற வேண்டும், பின்னர் பிஜேபி யின் மலர் (தாமரை) காப்பாற்றப்படும். 'சிராக் பாஸ்வன் , தேஜஸ்வியின் வெற்றியை உறுதிப்படுத்த, வேண்டுமென்றே ராகேஷ் ரோஷனை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறாரோ என்று பல முறை தோன்றுகிறது," என்கிறார்.
ஆனால், எல்ஜேபி செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அன்சாரி இதை மறுக்கிறார்.
ராகேஷ் ரோஷன் எல்ஜேபியின் ஐ.டி குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இங்கே அவர் போட்டியிடுவது ஏற்கனவே முடிவாகி விட்ட ஒன்று என்பது அவரது விளக்கம்.
ஆனால், அஷ்ரப் அன்சாரியின் வாதத்தை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிராக் பாஸ்வான் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளபோது, ஒரு முக்கியமான இடத்தில் இப்படி ஒரு வேட்பாளர், களமிறக்கப்பட்டது சந்தேகத்தை உருவாக்குகிறது என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இங்கிருந்து தேஜஸ்வி வெற்றி பெற்றால் அது அவருக்கு இரண்டாவது வெற்றியாக இருக்கும். இங்கிருந்து, அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் 1995 மற்றும் 2000. தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2005-ம் ஆண்டு, தேஜஸ்வி யின் தாய் ராப்ரி தேவி யும் இங்கிருந்து எம்.எல்.ஏ.ஆனார்.
லாலு இல்லாத தேஜஸ்வியின் அரசியல்
1977 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனது 29வது வயதில் சாப்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் லாலு யாதவ்.
2015 பிகார் சட்டசபை தேர்தலில் லாலு யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தனது 26வது வயதில் ராகப்பூர் தொகுதிஎம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேஜஸ்வி முதல் முறை எம்.எல்.ஏ.வாக ஆனதோடு, பிகார் மாநில துணை முதல்வரானார்.
லாலு யாதவ் கல்லூரி நாட்களில் அரசியலுக்கு வந்தார். 1973-ல் பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராக லாலு யாதவ் பதவி வகித்தார். அதற்குப் பிறகு பிகாரில் அவரது அரசியல் நாட்டம் குறையவே இல்லை.