தபால் தலைகளின் மூலம் தமிழ் எழுத்துக்களை நூதன முறையில் நூலாக வழங்கிய அஞ்சல் துறையினர்
அழகு தமிழும் அஞ்சல் தலையும்
தபால் தலைகளின் மூலம் தமிழ் எழுத்துக்களை நூதன முறையில் நூலாக தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தற்போது அந்நூல் திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்பு நிலையத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது இந்நூலினை அஞ்சல்தலை சேகரிப்பாளர்களான அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், ஹாபீஸ் அமைப்பு மதன், சதீஷ் உள்ளிட்டோர் அஞ்சல் தலை மூலம் மாணவ, மாணவிகள் அஞ்சல்தலை மூலம் தமிழ் எழுத்துக்களை கற்கும் வகையில் நூலாக வெளியிட்டு இருப்பது பாராட்டக் கூடியது என்றார்கள்.
மேலும் சிறுவர்கள் ஆர்வத்துடன் இந்நூலினை படிக்கின்றார்கள். இதுகுறித்து அஞ்சல் தலை சேகரிப்பாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் கூறுகையில், அஞ்சல் தலை என்பது அஞ்சல் சேவைக்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படும் காகித வில்லை ஆகும். பொதுவாக அஞ்சல் தலை ஒரு நீள்சதுர வடிவில் அமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தற்போது பல்வேறு வடிவங்களிலும் அஞ்சல் தலைகள் வெளிவருகிறது.
தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன அஞ்சல்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார்.
இன்றைய சூழ்நிலையில் அஞ்சல்தலைகள் பங்கு பலவகைப்பட்ட தாக உள்ளது. கலை, கலாச்சாரம், பண்பாடு ,விஞ்ஞானம் , அறிவியல் உள்ளிட்டவற்றை எல்லாம் பொது மக்கள் மனதில் பதிய வைக்கின்ற வகையில் முக்கிய சாதனமாக அஞ்சல் தலை உள்ளது.
பழமைக்கும், நிகழ்கால சாதனைகளுக்கும், புதுமைக்கும் அடையாளச் சின்னமாக அஞ்சல்தலை அடையாளப்படுத்தி கொண்டுள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பவர்கள் பொதுஅறிவு மேம்படச் செய்கிறது. குறிப்பாக மாணவர் சமுதாயத்தை பல்வேறு போட்டித் தேர்வுகளில் நம்பிக்கையையும் பங்கேற்க ஆயத்தப் படுத்துகிறது.
அஞ்சல் தலை சேகரிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. பரந்த நோக்கில் ஓர் ஆய்வு ஆகும். அஞ்சல்தலை வளர்ச்சி, வரலாறு, முன்னேற்றம் பற்றி தெரிந்து கொள்ள உதவும். அஞ்சல் தலைகளில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலைகள், குறு வடிவ அஞ்சல் தலைகள் என பல்வேறு தலைப்புகளில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் தற்போது அழகு தமிழும் அஞ்சல் தலையும் தலைப்பில் தபால் தலைகளின் மூலம் தமிழ் எழுத்துக்களை தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறையினர் நூலாக வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்ட நினைவார்த்த அஞ்சல்தலைகளைக் கொண்டு அ,ஆ, இ, ஈ ,க, ங, ச தமிழ் எழுத்துக்களை அழகாக எடுத்துரைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அஞ்சல் தலை எந்த ஆண்டு எதற்காக வெளியிடப் பட்டது என்பதையும் குறிப்பிட்டு உள்ளது மாணவ, மாணவிகளிடையே தமிழ் எழுத்துக்களை படிக்கவும் பொது அறிவினை வளர்த்துக் கொள்ளவும் வழிவகை செய்கிறது.
36 பக்கம் கொண்ட இந்நூல் 140 ரூபாய்க்கு திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்பு நிலையங்களில் விற்கப்படுகிறது என்றார்.