வால்பாறையில் நகரசபை கூட்டம்: பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக (1.11.22) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராம சபை கூட்டங்கள் போல் தமிழ்நாட்டில் முதல் முறையாக நகர சபை, மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் வால்பாறை 4-வது வார்டு பகுதியில் நகரசபை கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற உறுப்பினர் J.பாஸ்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நகரசபை கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் (பொ) சலாவுதீன், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி, மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதன்பிறகு பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்று, உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.