கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம்: மனுக்கள் வந்தால் நடவடிக்கை -மனித உரிமை ஆணையம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மனித உரிமை ஆணையம் முக்கிய அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, உயிரிழந்ததை சம்பவம் அனைவரைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் இறந்த மாணவிக்கு நீதிகேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக மாறி பள்ளியை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறுதி சடங்குகளும் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் உயிரிழந்த மாணவி படித்த பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவ வழக்கு குறித்து, பேசிய மனித உரிமை ஆணைய தலைவர், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் தன்னிச்சையான நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த சம்பவம் தொடர்பாக மனுக்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தற்போதைக்கு எந்த கருத்தும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். இன்று மனித உரிமை ஆணைய கருத்தரங்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும், கருத்தரங்கத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா நடைபெற உள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மனித உரிமை தொடர்பாக, சிறப்பாக பணியாற்றிய, 3 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)