வெள்ள அபாய எச்சரிக்கை: கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் வாழும் மக்கள், ஆற்றில் குளிக்க, துணி துவைக்க வேண்டாம்
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மோர்தானா அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மோர்தானா அணை தற்போது தனது முழு கொள்ளளவான 11.50 மீட்டரை அடைந்து, உபரிநீர் கவுண்டன் ஆற்றின் வழியாக வெளியேறி வருகிறது.
இதனால் கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும், கவுண்டன்ய ஆற்றில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அனைத்து ஏரி, குளம், குட்டை ஆகியவை முழுமையாக நிரம்பி உள்ளன. வேலூர் மாவட்டத்தில் பாயும் பாலாறு மற்றும் பொன்னையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை
எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியில் சென்று நீர் நிலைகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது. பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே குழந்தைகள் இருக்க வேண்டும். மாவட்டத்தின் மழை பாதிப்பு தொடர்பாகப் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மழை, வெள்ள பாதிப்பு குறித்து 1077, 0416 2258016 என்ற எண்ணிற்கோ அல்லது 93840 56214 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.