தீபாவளி பண்டிகை: வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள்: டிஜிபி சைலேந்திரபாபு
தீபாவளி பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுங்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட அமைதியாகவும், பாதுகாப்பாகவும், கொரோனா விதிமுறை பொதுமக்கள் பின்பற்றும் படி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்திவுள்ளார். கொரோனா விதிமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றி கடை வீதிகள், மார்கெட் பகுதிக்கு செல்லவேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
மருத்துவமனைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் இருக்கும் இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி பட்டாசுகள் வெடித்தல்வேண்டும். தடைசெய்யப்பட்ட வெடிகள், ராக்கெட்டுகள் வாங்கக்கூடாது. வெடிக்கவும்கூடாது. இதனால், தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.
குழந்தைகள் பெற்றோர்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடித்தல் வேண்டும். இதனால், விபத்துக்களை தவிர்க்கலாம். தீபாவளியன்று காலை 6 மணிமுதல் 7 மணிவரை மற்றும் மாலை 7 மணிமுதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அவசர உதவி எண் 101 மற்றும் அவசர காவல் உதவி எண்கள் 100 மற்றும் 112லில் அழைக்கவும்.
அதேபோல், வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், காவல் ரோந்து உங்கள் வீட்டிற்கு வருவதை உறுதிப்படுத்த முடியும். நடுஇரவில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள், அவ்வப்போது ஓய்வெடுத்து பயணம் மேற்கொள்ளவேண்டும். இதன் மூலமாக விபத்துக்களை தடுக்கலாம்.
அதேபோல ரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவு முழுவதும் விழிப்புடன் இருக்கவேண்டும். சந்தேகபடும்படி நபர்களின் நடமாட்டம் இருந்தால், உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.