5 நாட்களுக்கு கனமழை: 4 மாவட்டங்களில் மிக கனமழை -வானிலை மையம் அறிவிப்பு
இன்றுமுதல் தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்கிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே தமிழகத்தில் தீபாவளி வரையில் கனமழை நீடிக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிக்கையின்படி சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்றும், நாளையும், நாளை மறுநாளும் லட்சத்தீவு, கேரள கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.