Type Here to Get Search Results !

V வரிசையில் சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்: லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து அதிரடி சோதனை

V வரிசையில் சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்



அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து அதிரடி சோதனைகயில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில், கணக்கில் வராத பல ஆவணங்கள், ரொக்கங்கள், சொத்துக்கள் என்று கணக்கு எடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இன்று, அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பே அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பெயர் பட்டியல்களில் "V" வரிசையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன்படி ,எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கே.சி.வீரமணி பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரில் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக செப்டம்பர் 15-ஆம் தேதி, வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, செப்டம்பர் 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணி வீடு, அவரது உறவினர்கள், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தினர்.


நடைபெற்ற சோதனையில் சுமார் 5 கிலோ சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 34 லட்சம் ரொக்கப்பணம், 7 கிலோ வெள்ளி, 1 லட்சத்தி 80 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர், செல்போன், லேப்டான், ஹாட்டிஸ்க் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவித்திருந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டனர்.


அதேபோல், ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கு சொந்தமான, அவர் தொடர்புடைய 60 இடங்களில்  அதிரடியாக சோதனை நடத்தினர். சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தில் ஊழல் செய்திருப்பதாக இந்த சோதனை நடைபெற்றது.



இதையடுத்து, சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சம் ரொக்கம், நிறுவனங்களின் பணபரிவர்த்தனைகள், 2 கோடி வைப்புத் தொகை ஆவணங்கள், மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ஹார்டிஸ்க், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.


இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி) -கூட்டு சதி, 420 -மோசடி, 409 -நம்பிக்கை மோசடி, 109 -அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாதகமாக செயல்படுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என்று மொத்தமாக 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.


இதற்கு முன்பு, ஜூலை 22-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  அவரது பெயரில், அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரில், தம்பி சேகர் பெயரில்  தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயரில்  தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூர் உட்பட 26 இடங்களில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக  சோதனை நடத்தினர்.



நடத்தப்பட்ட  சோதனையில் காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள், ரொக்கம் 25,56,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்தது. அதனை அடுத்த சோதனைகளில் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.


எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர் அமைச்சராக இருந்தபோது உள்ள  வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில், இது தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார்  தெரிவித்துள்ளனர்.



இன்று அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, புதுக்கோட்டை  இலுப்பூரில் உள்ள சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies