பெங்களூரை சேர்ந்த பெண்ணை கொலை செய்யப்பட்டு சடலத்தை சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பெங்களூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஜ் மண்டல் 27 வயது என்ற பெண் தனது கணவர் பிரதாப்புடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பிரதாப் பணியாற்றி வந்தார். வீட்டின் உரிமையாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப், சில நாட்களாவே தான் சென்னையிலேயே இருப்பதாகவும், தேஜ் மண்டல் தனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு சென்று வீட்டின் உரிமையாளர் நடேசன் பார்த்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, நடேசன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் உடனடியாக வந்து தேஜ் மண்டல் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பரண் மீது ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது. அதில் அதிகப்படியான துர்நாற்றம் வீசியதால் அங்கு உடனடியாக தடவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு அதை திறந்து பார்த்தத்தில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அரை நிர்வாண கோலத்தில் பெண்ணின் சடலம் ஒன்று இருந்துள்ளது.
சூட்கேசில் சடலமாகக் கிடப்பது தேஜ் மண்டல் என்பதை வீட்டின் உரிமையாளர் நடேசன் உறுதி செய்துள்ளார். இதையடுத்து, கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேஜ் மண்டல் இறந்து சுமார் ஐந்து நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும் பாலியல் தொழிலில் ஏற்கனவே பிடிபட்ட நபர்களுடன் தேஜ் மண்டல் தொடர்பில் இருந்ததாகவும், இவர் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
சேலம் மாநகரில் அழகு நிலையம் என்ற பெயரில் ஃபேர்லேண்ட்ஸ், சங்கர் நகர் உள்ளிட்ட மூன்று இடங்களில் அழகு நிலையம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இவருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? அல்லது தொடர்பில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.