பொள்ளாச்சி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் விஷம் குடித்து தற்கொலை
பொள்ளாச்சி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பொள்ளாச்சி அக்.30.,
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த முத்தூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (20). 12ஆம் வகுப்பு படித்த கீர்த்திவாசன், நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். இதற்கு முன்னர் மூன்றுமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த கீர்த்திவாசன், தற்போது, நான்காவது முறை தேர்வு எழுதியுள்ளார். தேர்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கீர்த்திவாசன் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாககூறி இந்த முறையும் தோல்வியடைந்து விடுவேனோ என மனவருத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று (அக்.29) மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு தனது தாயார் வளர்மதியிடம் தான் விஷம் குடித்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து கீர்த்தி வாசனை மருத்துவ சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கீர்த்திவாசன் உயிரிழந்தார்.
தற்போது, மாணவர் கீர்த்திவாசனின் உடல், உடற்கூராய்விறகாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


