வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கத்தைத் தொடர்ந்து ஐந்து நெருப்புக் கோழிகளும் உயிரிழப்பு
வயது முதிர்வின் காரணமாக வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஐந்து நெருப்புக் கோழியும் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 26ஆம் தேதி, வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த கவிதா என்ற 19 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. அதேபோல் நேற்று ஐந்து நெருப்பு கோழிகளும் உயிரிழந்துள்ளது. ஒரே நாளில் ஐந்து நெருப்புக் கோழிகளும் உயிரிழந்துள்ளதால், பூங்கா நிர்வாகம் இறப்பிற்கான காரணம் அறிய பிரேத பரிசோதனை மேற்கொண்டது.
இதையடுத்து, நெருப்பு கோழி வைரஸ், பாக்டீரியா மற்றும் நச்சுயியல் ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யபபட்டன. இரத்த மாதிரி மற்றும் உடல் உறுப்புகள் ஆய்வின்போது நெருப்பு கோழிகளுக்கு காலரா இல்லை என்று அறியப்பட்டது. இதையடுத்து, பூங்கா நிர்வாக மருத்துவர்கள் மீதமுள்ள நெருப்பு கோழிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.