தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுங்கள் : வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம்
தீபாவளியை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடவேண்டும் என வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில் கூட்டம் கூடுகின்றனர். நகரின் பல இடங்களிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் பொருட்களை வாங்க வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சானிடைசர் கைகளில் பயன்படுத்திய பிறகு பட்டாசு வெடிக்கக்கூடாது. சமூக விலகல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றுடன் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும்
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். ஒரு வாளியில் தண்ணீரை எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் அருகில் வைத்திக்கவேண்டும்.
வெடிக்காத பட்டாசுகள் மீதும், உபயோகப்படுத்தப்பட்ட கம்பி மத்தாப்புகள் மீதும் தண்ணீர் தெளிக்கப்படவேண்டும். நீண்ட பத்திக்குச்சியை பயன்படுத்தி நின்ற நிலையிலேயே, திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்கச்செய்ய வேண்டும்.
சிறியவர்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களது கண்காணிப்பிலேயே வெடிக்கச் செய்யவேண்டும்.
பட்டாசுகளை சட்டை மற்றும் கால் சட்டை பைகளில் போடுவதற்கு அனுமதிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணிகளை அணிந்திருப்பதுடன், பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடலோடு ஒட்டிய பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்திட வேண்டும்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கவேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக்கூடாது. வீட்டுக்குள் மற்றும் வாகனம் நிறுத்தும் பகுதிகளில் ஒருபோதும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாசுகளை குவித்து வைத்தோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ வெடிக்கக்கூடாது.
பட்டாசுகளை கைகளில் பிடித்தவாரோ அல்லது தூக்கி வீசியோ, பாட்டில்கள், தேங்காய் சிரட்டை மற்றும் பிற உபகரணங்களில் வைத்தோ வெடிக்கக்கூடாது. காதுகளை பாதிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்திடவேண்டும்.
அதிக சத்தமுள்ள பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். உடல் நலம் குன்றியோர் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் பூமி அதிரும் வகையில் சத்தம் கேட்டால் அவர்கள் இறப்பை சந்திக்கக்கூட நேரிடும்.
நமது பகுதி வனத்தால் சூழ்ந்தது என்பதால் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை அச்சுறுத்தும் வகையில் வெடிகளை வெட்டிக்காதீர்கள். முடிந்தவரை பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது வனவிலங்குகளை பறவைகளை அச்சுறுத்தலில் இருந்து மீட்கலாம்.
பட்டாசுகள் வெடிக்கும்போது காயம் ஏற்பட்டால் அப்பகுதியை உடனடியாக குழாய் நீரில் படுமாறு காண்பிக்கவேண்டும். ஒருபோதும் தேய்த்து கழுவக்கூடாது. பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.







