ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவிக்கும் வி.கே.சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த வி.கே.சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் வி.கே.சசிகலா, ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அரசியலில்லிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசிய வி.கே.சசிகலா தான் விரைவில் கட்சியை கவனித்துக் கொள்ள வந்துவிடுவேன் என்று கூறிவந்தார். மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று வி.கே.சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்தார். இதற்காக பாதுகாப்பு கேட்டு வி.கே.சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, தியாகராயநகர் இல்லத்தில் இருந்து இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த புறப்பட்டார். வி.கே.சசிகலா மெரினாவுக்கு வருவதை அறிந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் மெரினா கடற்கரையில் காத்திருந்தனர். வி.கே.சசிகலாவின் தி.நகர் இல்லத்திலும் இன்று காலை முதலே தொண்டர்கள் பார்க்க முடிந்தது. அதிமுக கொடியுடன் வி.கே.சசிகலா காரில் புறப்பட்டார்.மெரினாவுக்கு அவர் காரில் புறப்பட்டதும் வாசலில் காத்திருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கோயிலில் வி.கே.சசிகலா வழிபாடு செய்தார். மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த வி.கே.சசிகலா மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருகை புரிந்த வி.கே.சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர் , அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் வி.கே.சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.