வால்பாறை அக்.1.,
நிலச்சரிவு மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையினரால் கைவிடப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பில் கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கல்லார்குடி பாரம்பரிய கிராம சபையின் தீர்மானத்தின் படி ‘’தெப்பகுள மேட்டில்’’ புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ம் தேதி வருவாய்த்துறை, வனத்துறை, நில அளவைத்துறையினர் இணைந்து பாரம்பரியமான ‘தெப்பகுள மேடு' பகுதியில் புதிய கிராமத்திற்கான நில அளவீடு பணிகளும் முடிக்கப்பட்டு ஓராண்டும் ஆகிவிட்டது.
மொத்தம் 23 குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக கானகத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து அரசுக்கும், வனத்துறைக்கும் நிலத்தை கையளித்த கொடையாளிகள். ஆனால் இன்றோ இந்த தேசம் அந்த பூர்வகுடிகள் உயிர்வாழ / குடியிருக்க நிலம் வழங்க மறுக்கிறது. இப்பகுதியில் காடர்கள் குடியேறுவதற்கு வனத்துறையினர் பெரும் தடையாக உள்ளனர்.
நாங்கள் போராடுவது நாங்களும், எங்கள் தலைமுறையும் இந்த காடுகளில் வாழ்ந்து இந்த காடுகளிலேயே சாவ வேண்டும். வேறு ஒன்றும் எங்களுக்கு ஆசை இல்லை. உயிர் வாழ்வதற்கு காந்தியை போல் அறவழியில் போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்கின்றனர் இந்த அமைதி வழி சமூகத்தினர்.
ஆம் இனி இந்த எளிய குரலற்ற மக்களுக்கு மகாத்மா காந்தி பிறந்தநாளில் அறவழியில் போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நாளை நடைபெற உள்ள அறவழிப் போராட்டம் ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ எதிர்த்து அல்ல. 100 பழங்குடிகள் மாண்போடு, கண்ணியமாக உயிர்வாழ்வதற்காக மட்டுமே.
இந்த அறவழிப் போராட்டத்திற்கு அறவழியில் செயல்படும் சமூக ஆர்வலர்களையும், மக்கள் இயக்கங்களையும், பழங்குடி உறவுகளையும், தோழமை அமைப்புகளையும், பொதுமக்களையும் கல்லார் காடர் பழங்குடி மக்கள் சார்பாக அழைக்கிறோம்..
