இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில், பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகள் வரும் 01.09.2021 முதல் திறக்கப்பட உள்ளது.
எனவே, 2021-22 கல்வியாண்டில், மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநரிடம் காண்பித்து தம் இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் பள்ளி வரை சென்றுவர, கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், அரசு கல்லூரிகள், அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Govt ITI, Govt college, Govt polytechnics) பயிலும் மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநரிடம் காண்பித்து தம் இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் கல்வி நிறுவனங்கள் வரையில் சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு மூலம், தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
