வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை: கேரளா எஸ்டேட் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும்
வால்பாறையில் உள்ள 56 எஸ்டேட்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். தற்போது தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தினமும் கூலியாக ரூ.343.27 வழங்கப்படுகிறது.
ஆனால், அருகில் உள்ள கேரள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.414.16 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. அருகில் இருக்கும் கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு ரூ.416.16 கூலி வழங்கப்படுகிறது. எங்களுக்கும் கேரளா தொழிலாளர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த பயனும் இதுவரை இல்லை என்கிறார்கள்.
இதுபற்றி இந்திரா தேசிய தோட்ட பொது தொழிலாளர் சங்கம் பொதுச்செயலாளர் k.அருணாகிரி பாண்டி கூறியதாவது:- கேரள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய ரூ.414.16 தினக்கூலியை தமிழ்நாடு தேயிலை தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.நாளுக்குநாள் விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வே கிடையாது. இந்தநிலை மாறவேண்டும் என்று கூறினார்.

