சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் டிடிவி திகரனை சந்தித்து, அமமுகவில் இணைந்த நிலையில், கோகுலம் தங்கராஜூம் இணைந்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் தனக்கு சீட் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கோகுலம் தங்கராஜ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதில் இருந்து ஒருபுறம் ஆதரவு மறுபுறம் எதிர்ப்பு என இருந்து வருகின்றன. இதையடுத்து, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், அதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் டிடிவி திகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இந்த முடிவு எடுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ராஜேந்திர பாலாஜிக்காக கட்சியா அல்லது கட்சிக்கு ராஜேந்திரபாலாஜியா? முதல்வர், துணை முதல்வரை ஏமாற்றி வருகிறார் ராஜேந்திரபாலாஜி.
வெற்றி வாய்ப்பிருக்கும் யாருக்கும் அதிமுகவில் வாய்ப்பு வழங்கவில்லை. இந்தத்தேர்தலுக்கு பிறகு அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஆட்சியை முடிவு செய்யும் இடத்தில் இருப்பார். இரண்டாண்டு காலமாக நான் ஆற்றிய பணிகள் என் தொகுதி மக்களுக்கு தெரியும். மக்களின் ஆதரவோடு, நிர்வாகிகள் வேண்டுதலோடுதான் அமமுகவில் இணைந்துள்ளோம். என்று கூறினார். இதேபோல ஆங்காங்கே அதிருப்தி குரல்கள் ஒலித்து வருகின்றது.
இதற்கிடையில், தோப்பு வெங்கடாசலம் வேட்பாளர் பட்டியல் குறித்து வருத்தம் தெரிவித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


