அதிமுகவின் அதிருப்தியாளர்களின் வாக்குகளும் அமமுகவே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக 3வது பெரிய அணியாக அமமுக வலம்வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள அமமுக, எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உட்கட்சி பூசலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை தொடங்கினார். அதிமுகவை மீட்டெடுப்பதை தமது லட்சியம் எனவும் சூளுரைத்தார். பெங்களூரு சிறையில் சசிகலா இருந்த போது, அவ்வப்போது அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த நிலையில், அதிமுகவும், அமமுகவும் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஆச்சியை கொடுத்தார். எனினும் அமமுக தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்த டிடிவி தினகரன், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அமமுக கூட்டணியில் ஓவைசியின் AIMIM கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், விடுதலை தமிழ்ப் புலிகள், மக்களரசு, கோகுல மக்கள் கட்சி, மருது சேனை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தநிலையில், உடன்பாடு எட்டப்படாததால், அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சிக்கு ஆலந்தூர் ஆம்பூர், பாளையங்கோட்டை, திருச்சி மேற்கு, திருவாரூர் மற்றும் மதுரை மத்தி ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மக்களவை தேர்தலில் ஏற்கனவே, அமமுகவுடன், எஸ்டிபிஐ கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்நிலையில், அதிமுகவில் தற்போதைய எம்எல்ஏக்கள் 41 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர்களது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அதிமுகவின் அதிருப்தியாளர்களின் வாக்குகளும் அமமுகவிற்கே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமமுக 3வது பெரிய அணியாக வலம்வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


