சசிகலா வருகைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் முக்கிய அமைச்சரும், ஐவர் குழுவில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணி வெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார். சசிகலா வருகை குறித்தும் எந்தப் பேட்டியும் கொடுக்காமல் விலகலையே கடைப்பிடித்துவந்தார். தற்போது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேட்டியளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “நம்முடைய பொது எதிரி திமுக. நமக்குள் இருப்பது அண்ணன்-தம்பி பிரச்சினை. நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர மக்கள் விரும்புவதால் அதற்கு நாம் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராக ஆதரவு தெரிவித்தாலும், பொதுச்செயலாளராக சசிகலா தொடர்வதற்கான ஆதரவு சிக்னலை சேர்த்தே கொடுத்திருக்கிறார். என்னவொன்று திமுகவை பொது எதிரியாகச் சித்தரித்து மறைபொருளாக உணர்த்தியிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதை வைத்து சசிகலா அணிக்கான சிக்னல் என எப்படி கூற வேண்டும் என்று கேட்டால் அதற்கும் ஒரு மறுக்கமுடியாத பதில் இருக்கிறது.
சசிகலா வருகைக்கு இரண்டு நாட்கள் (பிப்.6) முன்னர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பணிக்கான கூட்டம் என்று கூறப்பட்டாலும், உள்ளே நடந்தது என்னவோ சசிகலாவுக்கு எதிரான தலைமையின் கூட்டமே. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கலந்துகொள்ளாத ஒரே ஆள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டும் தான்.
ஐவர் குழுவில் தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சசிகலா குறித்து புகாரளிக்க டிஜிபி அலுவலத்துக்குச் சென்றனர். அதிலும் விடுபட்டவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டும் தான். இதிலிருந்தே நமக்கு விடை கிடைக்கிறது. இதன்மூலம் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தொடர்வதில் வேலுமணிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பது பட்டவர்த்தனமாகிறது.
அண்ணன்-தம்பி மோதல் கருத்தை எஸ்.பி.வேலுமணி உதிர்த்தாலும் அதற்குப் பாதை போட்டுக்கொடுத்தது வேறு யாருமல்ல; இரட்டைத் தலைமையில் ஒரு தலைமையும், துணை முதல்வராகிய ஓபிஎஸ் தான். மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “அதிமுகவில் உள்ள அண்ணன் தம்பி பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம்” என்ற கருத்தை முன்மொழிந்திருந்தார்.
தற்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்திருக்கிறார். இதன்மூலம் கட்சி சசிகலாவிடம், ஆட்சி இரட்டைத் தலைமையிடம் என்ற உடன்படிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.



