Type Here to Get Search Results !

சசிகலா விசயத்தில் ஓபிஎஸ் மௌனம்… மகன் மூலம் செக் வைத்த எடப்பாடி பழனிச்சாமி ! #EPS #OPS #Sasikala

சசிகலா வருகையால் அவருக்கு லாபமோ இல்லையோ, ஓபிஎஸ் தரப்புக்கே நல்ல லாபம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். சசிகலா மீதான நிலைப்பாட்டை வைத்து ஓபிஎஸ் எடப்பாடிக்கு ஆட்டம் காண்பித்துவருகிறாராம். உரலுக்கு ஒரு பக்கம் இடி… மத்தாளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போல் தவித்துவருகிறாராம் முதல்வர் எடப்பாடி.

சசிகலாவின் விஷயத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து எந்த எதிர்க்கருத்தும் வந்ததாகத் தெரியவில்லை. இவ்வளவு ஏன் ஓபிஎஸ்ஸே கூட சசிகலாவின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. இந்தக் கள்ள மௌனம் அனைத்துமே காரியம் சாதிக்கத் தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். 


ஓபிஎஸ் தரப்பில் கேபி முனுசாமி மயிலிறகால் வருடி விடுவதுபோல் தான் விமர்சனத்தை முன்வைத்தார். மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் போதும் கட்சியில் சேர்த்துக்கொள்கிறோம் என்றார். இது நிச்சயம் ஓபிஎஸ் கருத்தாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல அவர் சசிகலா வருகைக்கு முன்னரே சூசகமான ஒரு வார்த்தையும் உதிர்த்தார். நமக்குள் இருப்பது அண்ணன்-தம்பி பிரச்சினை; பேசி தீர்த்துக்கொள்வோம் என்றார்.


இதையெல்லாம் விட அவரின் மகன் ஜெயபிரதீப் ‘மனிதாபிமான’ அடிப்படையில் சசிகலா உடல்நலம் குணமடைய வாழ்த்து தெரிவித்தது தான் ஹைலைட். சசிகலாவின் ரிசார்ட் பக்கமாகச் சென்ற கர்நாடகா மாநில அதிமுக செயலாளரை அவசர அவசரமாக கட்சியை விட்டு நீக்கிய இரட்டைத் தலைமை, ஜெயபிரதீப் விவகாரத்தில் அமைதி காத்தது. பெயரளவுக்குக் கூட அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


இதெல்லாம் எடப்பாடி தரப்புக்கு ஓபிஎஸ் கொடுக்கும் அழுத்தமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது அதிகாரத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரும் சசிகலாவின் உதவியால் மேலே வந்தவர்கள். அவர்களின் விசுவாசம் சசிகலாவுக்குப் பேராதரவாக இருக்கலாம். 

ஓபிஎஸ் தரப்பை எப்படியாவது அடக்கி தனது கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி நினைப்பதில் ஆச்சரியமில்லை. கட்சியில் எடப்பாடிக்குச் சரிக்குச் சமமான ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் முக்கியஸ்தர் ஓபிஎஸ். அவரையும் விட்டுவிட்டால் வலிமை குறைந்துவிடும். இதற்காக ஒரு திட்டத்தைத் தீட்டி ஓபிஎஸ்ஸிடம் டீலும் பேசிமுடித்துவிட்டாராம் எடப்பாடி.



பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முதற்கட்டமாக 50 வேட்பாளர்களின் லிஸ்டை அறிவிக்கப் போகிறாராம். இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் அங்கு தான் ஓபிஎஸ்க்கு செக் வைத்திருக்கிறார். அந்த லிஸ்ட்டில் ஜெயபிரதீப்பின் பெயரும் இருக்கிறதாம். சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுக்காமல் இருந்தால் ஜெயபிரதீப்புக்கு சீட் கொடுப்பதாக எடப்பாடி டீல் பேசியிருக்கிறார். 


இதனால் மகனின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ஓபிஸ் டீலை முடித்துவிட்டாராம். இனிமேல் சசிகலா பக்கம் ஓபிஎஸ் தாவுவதற்குச் சாத்தியமில்லை என்கின்றனர். கிளைமேக்ஸ் பிப்ரவரி 24இல்… காத்திருப்போம்…

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies