Type Here to Get Search Results !

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் வெடிக்கப் போகிறது பாருங்கள் -அறிவாலய சீனியர்கள் #Dmk, #Udayanidhi, #MK_Stalin,

திமுகவில் உதயநிதிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அமுங்கி இருந்த கலகக்குரல்கள், ஸ்டாலினின் சமீபத்திய பேட்டி ஒன்றைத் தொடர்ந்து மீண்டும் வெடித்துக் கிளம்பத் தொடங்கி இருக்கிறது. இதனால், அறிவாலயம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.

வாரிசு அரசியல் என்றாலே அது திமுகதான் என தமிழக மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், திடீரென திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது கட்சிக்குள்ளே கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 


இருப்பினும், தேர்தல் நேரம் என்பதால் கட்சி நிர்வாகிகள் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் அமைதி காத்தனர்.


ஆனால், இதையே தனக்கு சாதகமாக கருதிக்கொண்டார் மு.க. ஸ்டாலின். இதனையடுத்து உதயநிதியை அழைத்து மாவட்டங்களில் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தரவுகள் பறந்தன.



இளைஞரணி செயல்பாடுகளோடு நிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எங்களது அரசியல் அனுபவத்துக்கு ஈடான வயது கூட இல்லாத உதயநிதியை அழைத்துக் கூட்டம் போடுங்கள் என்றும், அவர் சொல்படி கேளுங்கள் என்றும் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என பல மாவட்டச் செயலாளர்கள் அறிவாலயத்துக்கு போனைப் போட்டு, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அக்கட்சியின் சீனியர் தலைவர் ஒருவர் மூத்த பத்திரிகையாளரிடம் ஆஃப் த ரெக்கார்டாக கூறினார்.


மேலும் ’கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல் உதயநிதி பேசுகிற பேச்சும், காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதும் கட்சிக்கு அவப்பெயரைத்தான் தேடித்தருகின்றன. 


குறிப்பாக, முதல்வர் எடப்பாடி, சசிகலா காலில் விழுந்து வணங்கியதை மிகவும் கொச்சையாக பேசியது எங்களுக்கே மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி, பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கும் அவப்பெயரை உருவாக்கியதுதான் மிச்சம்’ என மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களுக்குள் ரகசியமாக பேசிக்கொள்வதாக தகவல்.



இந்த நிலையில், திமுகவுக்குத் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், கட்சியில் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டைப் போட்டு வந்தார். அவர் சமீபத்தில் ஸ்டாலினிடம் அளித்த ரிப்போர்ட்டில், உதயநிதிக்கு தலைமை முக்கியத்துவம் அளிப்பதாலேயே வேறு வழயில்லாமல், மற்ற நிர்வாகிகளும் அதனை பின்பற்றுகிறார்கள்.


ஆனால் கட்சியைத் தாண்டி திமுக அபிமானிகளிடமும், பொதுமக்களிடமும் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாம். 


இதனையடுத்தே, முப்பெரும் விழா மேடையில் உதயநிதியின் படத்தை வைக்க வேண்டாம்’ என்று மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் மற்ற கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி படம் தொடர்ந்து இடம்பெறத்தான் செய்கிறது.



இந்த நிலையில், அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க. ஸ்டாலின், உதயநிதிக்கு கட்சியில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தும் விதமாக, ‘உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல. 


எப்படி மற்ற கட்சித் தோழர்கள், கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள், படிப்படியாக வளர்ந்து வந்து இன்றைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்களோ, அப்படித்தான் உதயநிதியும் வந்திருக்கிறார்’ என கூறியுள்ளார்.

ஸ்டாலினின் இந்த பேச்சு, கட்சிக்காக பல ஆண்டு காலம் ஓடாய் உழைத்து உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தலைமைக்கு எதிராக கலகக்குரல்களை எழுப்பி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க துணைச்செயலாளர் சுந்தரேசன் என்பவர் , ‘தி.மு.கவில் வாரிசு அரசியல் தாண்டவமாடுகிறது’ என்று பேசிய வீடியோ ஒன்று கட்சியினரிடையே பரபரப்பாக சுற்றி கலகத் தீயை மூட்டி உள்ளது. 


இவரைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலிருந்தும் இது போன்ற கலகக்குரல்கள் எழுந்தால் என்ன செய்வது என்று பதற்றமான கட்சித் தலைமை, கலகக்குரல் எழுப்பிய சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாம்!


’நடப்பது எல்லாம் நல்லதாக தெரியவில்லை. இது தொடக்கம்தான். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் வெடிக்கப் போகிறது பாருங்கள்’ என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.


 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies