திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கணக்கு விவரம் தேர்தல் தேதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என ஸ்டாலின் உறுதிப்பட கூறிவிட்டார்.
இருந்தாலும், கூட்டணிக்குள் யார் யாருக்கு எவ்வளவு சீட் கொடுக்கலாம் என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே போவது தான் இந்தத் தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையப் போகிறது என்ற தகவலும் வந்தது.
முத்தாய்ப்பாக தமிழக காங்கிரஸ் தலைமை கமலின் மக்கள் நீதி மய்யத்தை வரவேற்பதாகக் கூறி பரபரப்பைக் கூட்டியது. இதுதான் கூட்டணி பிளவுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்த இரு தகவல்களுக்கும் ஸ்டாலின் நேர்காணலில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
காங்கிரஸ் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், 'திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் என பாஜக தலைவர் முருகன் நினைக்கிறார். அது உடையாது' என்று கூறினார். அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, மக்கள் நீதி மையம் கூட்டணிக்கு வருவது குறித்து பேச வேண்டும்.
மக்கள் நீதி மையம் வந்தால் பார்ப்போம்… பேசுவோம்' என்று போட்டு உடைத்துவிட்டார். இதனால், திமுக கமலின் வருகையை எதிர்நோக்கியிருப்பது திட்டவட்டமாகியுள்ளது.
தனது, திரைப்படங்கள் வெளியாவதற்குப் பெரும் சிக்கலாக இருந்த அதிமுக மீதான அதிருப்தியே கமலை கட்சி தொடங்குவதற்குக் காரணம் என்ற ஒரு பேச்சு உண்டு. அதன் வெளிப்பாடகவே அதிமுகவே கொஞ்சம் தூக்கலாகவே கமல் விமர்சித்தார்.
அதிமுகவின் அமைச்சர்களுக்கும் கமலுக்குமே அவ்வப்போது சுவாரசியமான அரசியல் உரையாடல்கள் நிகழும். இதன்மூலம் கமலின் அதிருப்தியை அறுவடை செய்யலாம் என்ற திட்டத்தை ஸ்டாலின் வகுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சசிகலாவின் வருகையால் திமுகவுக்குப் பாதிப்பில்லை என்று ஸ்டாலின் காட்டிக்கொண்டாலும், நிச்சயம் அது அக்கட்சிக்குப் பாதகத்தையே விளைவிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதனை ஸ்டாலினும் நன்கு அறிந்திருப்பார்.
கமல் தனித்து நிற்கும் பட்சத்தில் சில வாக்குகள் பிரியலாம். ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிப்பது போல் கமலுடனான கூட்டணிக்கு ஸ்டாலினி பதிலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நாமளும் பார்ப்போம்… பேசுவோம்!



