’’ஏ1 ஜெயலலிதா பெயரை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பழனிச்சாமி கூட்டத்திற்கு ஏ-2 சசிகலாவின் வருகை அடி வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது. பல சினிமாக்களில் டான் ஒருவன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு நாட்டையே தேட்டை போட்டுக் கொண்டிருப்பான். திடீரென திருப்புமுனை காட்சியாக சஸ்பென்ஸ் உடன் கூடிய பின்னணி சங்கீதம் இசைக்க சிறைச்சாலை ஒன்றின் கதவு திறக்கப்படும். திறந்தவுடன் ஒரு கால் மட்டும் சிறைச்சாலைக்கு வெளியே அடியெடுத்து வைப்பது க்ளோசப் காட்சியாக காட்டப்படும். பின்னணி இசையில் பட பட வென டிரம்மம் டிரம்பட்டும் ஆரவாரமாக ஒலிக்க முழு உருவம் காட்டப்படும்.
வாழ்க’ முழக்கங்களோடு ஆளுயர மாலைகள் அவருக்கு சூட்டப்பட்டு ஆர்ப்பாட்டத்துடன் அந்த நபர் வரவேற்கப்படும். ஆடிப்பாடி அந்த நபரை வரவேற்ற அவர்களில் பலர் முதலில் காட்டப்பட்ட டான் இருந்தவர்கள் ஆக இருப்பார்கள். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ’’எங்கே அவன் வரவில்லையா?’’ என கேட்க, ’’அவரு அவரு’’ என ஒருவன் பதில் சொல்லிட திணற, அந்தக் காட்சி கட் செய்யப்பட்டு பழைய டானின் கூடாரத்தில் அந்த நடுங்கியவாறு அமர்ந்திருப்பது காட்டப்படும்.
அந்த சினிமா காட்சி போல இப்போது நாட்டு நடப்பும் உள்ளது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வரவிருக்கும் செய்தி பழனிச்சாமி கூட்டத்தை நடுங்க வைத்துள்ளது. சிறைக்குச் செல்லும் முன் தன்னை சினிமாவில் வருவது போல டானாக உருவாகிய பெரிய டானை முற்றிலும் ஒழித்து விடலாம் எனக்கருதி செயல்பட்ட சின்ன டான் எப்படி நடுங்குவானோ அதைப் போல நடுங்க தொடங்கியிருக்கிறார் பழனிச்சாமி.
நம்பிக்கைக்குரிய நபராக இருந்து என்றென்றும் இருந்து விடுவார் என எண்ணித் தானே சசிகலா அவரை முதல்வராக அறிவித்தார். தனது முதலமைச்சர் பதவியைக் காத்துக் கொள்ள வரம் தந்தவன் தலையிலேயே கை வைத்த கதைபோல சசிகலா தலையிலேயே கை வைத்த காட்சிகள் துரோகத்தின் உச்ச கட்ட காட்சிகள் அல்லவா? இன்று சசிகலா சிறைவாசம் முடித்து சென்னை திரும்புகிறார் என்றதும் எப்படியெல்லாம் பழனிச்சாமி பதறிப்போய் இருக்கிறார் என்பதை தமிழக அரசியல் களத்தில் அதிமுக நடத்திடும் ஒவ்வொரு செயலும் தத்ரூபமாக படம் பிடித்து காட்ட வில்லையா?
சசிகலா சிறை செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை கையை ஓங்கி அடித்து சபதம் செய்த காட்சிகள் எடப்பாடி கண் ஓட, சிறை மீண்டு வரும் சசிகலா அதே சமாதிக்குச் சென்று துரோகத்தை வேறருப்பேன் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவேன் என சபதமிடுவாரே என்ற பயத்தில் திறந்த சமாதியை மூடிவிட்டார். அமைச்சர்களை டிஜிபியிடம் அனுப்பி சட்டம் ஒழுங்கும் அபாயம் வந்திருக்கிறது தடுத்து நிறுத்துங்கள் என்று அபயக்குரல் எழுப்பி கூறுகிறார். பகலிலேயே நா குழறி, பயத்தில் உளற, சந்தேக கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களிடம் மேலும் அவரை பதிலளிக்க விடாமல் மற்ற அமைச்சர்களும் மூத்த அமைச்சர்களும் அவரை இழுத்துக் கொண்டு ஓடும் காட்சிகளும் நாடே கண்டு சிரிக்கும் விதத்தில் இருந்த சிறந்த நகைச்சுவை காட்சிகள் அல்லவா?
நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறையிடம் அமைச்சரவைக்கு தகவல் தரும். ஆனால் இங்கே சட்ட அமைச்சர் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து என காவல்துறைக்கு தகவல் தருகிறார். காவல்துறை அதனை அறிந்த அளவுக்கு அத்தனை தூரம் பழனிச்சாமி ஆட்சி ஏற்பட்டு போய்விட்டதா. உச்சகட்ட காட்சியாக ஊரை அடித்து கொள்ளையடித்தவர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று சசிகலாவுக்கு சொந்தம் கொண்டாடுகிறார் என செய்தியாளர்களிடம் சட்ட அமைச்சர் சண்முகம் பேச சசிகலா தண்டனை பெற்ற அதே வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றார் அப்படியானால் அவரை அடித்து கொள்ளையடித்தவர் என்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்க, அமைச்சர்கள் துண்டை காணோம் துணியை காணோம் எனும் போக்கில் செய்தியாளர்கள் கூட்டத்தை முடித்து ஓடினர்.
சிறையிலிருந்து வெளியே வந்த டானை எங்கள் எல்லைக்குள் அனுமதிக்கமாட்டோம் என சின்ன டான் போலீசிடம் புகார் அனுப்ப போலீஸ் என்ன தண்டனை கொடுத்தாலும் பயப்பட மாட்டோம் என பெரிய கூட்டம் கொக்கரிக்க நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை உருவாக்கிய கிளைமாக்ஸ் காட்சிகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல இந்த நேரத்தில் ’களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் வெளியாகி தமிழக சுவர்களில் எல்லாம் அந்த படத்தின் சுவரொட்டிகள் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.’’ என்று திமுகவின் முரசொலி நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.




