வருகிற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காக சட்ட ரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
விடுதலையாகி சென்னைக்கு வந்த சசிகலா, எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரின் சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மட்டும் அவ்வப்போது பேட்டியளித்துவருகிறார். இருப்பினும் சசிகலாவின் அடுத்த நடவடிக்கைகள் என்னாவாக இருக்கும் என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தநிலையில், ஒரத்தநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், அதிமுகவை மீட்டெடுப்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்திற்கு வருவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப்பெற்றால் நாங்கள் ரோட்டில் தான் இருப்போம். ஆனால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கே தெரியும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காக சட்ட ரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களிடமே இருக்கிறார்கள். அமமுக தான் முதல் அணி. இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை. அம்மாவுடைய ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம்.
எப்பவுமே, கொள்ளையர்கள் அடுத்தவர்களைக் கொள்ளையர்கள் என்றுதான் கூறுவார்கள். ஊற்றிக் கொடுப்பவர்கள் அடுத்தவர்களை ஊற்றிக் கொடுப்பவர் என்றுதான் சொல்வார்கள். ஸ்லீப்பர் செல்ஸ் இன்றும் இருக்கின்றனர். அவர்கள் ஸ்லீப்பர் செல்ஸ் இல்லை எங்களின் நலம் விரும்பிகள். எப்போது வெளிவர வேண்டுமோ அப்போது வெளியில் வருவார்கள் எனக் கூறினார்.


