செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்வில் பங்கேற்பதற்காக நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வந்திருந்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெட்ரோல் ஜிஎஸ்டி வரி கொண்டுவரவேண்டும் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசிய சரத்குமார், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கும் அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணியில் தான் இருக்கின்றன. இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்பது பிரேமலதாவின் கருத்து.
தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பட்ட பிறகுதான் கூட்டணிகள் உறுதி செய்யப்படும் என்று கூறினார். ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் கொடுத்தால் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் ஏற்கனவே தெரிவித்து விட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இவர் கூறுவதை பார்த்தால் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காதது போலவே தெரிகிறது. ஏற்கனவே 41க்கும் குறைவான சீட் கொடுத்தால் கூட்டணி அமைக்க மாட்டோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
பாஜகவுக்கே 30 முதல் 40 தொகுதிகள் மட்டுமே கொடுக்க அதிமுக திட்டமிட்டிருக்கும் நிலையில், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுப்பது நடக்காத காரியம் என்றும் சமத்துவ மக்கள் கட்சிக்கும் அதிக தொகுதிகளை அதிமுக கொடுக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதன் படி, இந்த இரு கட்சிகளும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பது சந்தேகமே.
இதனிடையே, சசிகலா வருகைக்கு பிறகு தான் கூட்டணி கட்சிகள் இவ்வாறு ஜகா வாங்குவதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. அமமுக தேர்தலை தனித்து களம் கண்டால், அதிமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகள் அமமுகவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசியல் களமே சூடு பிடித்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





