திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் இப்போதைக்கு தேவையில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மதுரை அழகர்கோவில்சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மதிமுக சார்பில் நடைபெற்ற நிதி அளிப்பு விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- மதிமுக தொகுதி மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். வரும் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆவார் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தருகின்றனர்.
தமிழக முதல்வர் 9 ஆண்டு காலம் தூங்கிவிட்டு தற்போது அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். தமிழகத்திற்கு வர வேண்டிய எந்த திட்டமும் வரவில்லை. வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதில், மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும், மாநில அரசு, மத்திய அரசின் கொத்தடிமை அரசாகவும் உள்ளது.
தேர்தலில் 234 இடங்களில் திமுக மகத்தான வெற்றிபெறும். வரும் தேர்தலில் அதிமுகவையும், பாஜகவையும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதால், எத்தனை இடம் கொடுத்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். புதிதாக எந்த கட்சிகளும் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை.
சசிகலா விடுதலை ஆகியுள்ளார். அவ்வளவுதான்… எனது மகன் இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார். கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை. தேர்தலில் முதியவர்களுக்கு தபால் வாக்கு வழங்குவது என்பது சரிதான் என்பது எனது கருத்து. ஸ்டாலின் குறிப்புகளை துண்டுசீட்டில் எடுத்து கூறி வருகிறார். முதல்வர் போல கம்பராமயணம் எழுதியது சேக்கிழார் என்பது போல கூறவில்லை. 7 தமிழர் விடுதலை விவகாரம் என்பது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நடத்தும் கபட நாடகம், எனக் கூறினார்.

