நாங்கள் காசு கொடுத்து வாக்குக் கேட்பவர்கள் அல்ல. நங்கள் மக்களிடம் சிறந்த ஆட்சியைக் கொடுப்போம் என்று கூறி வாக்குகளைப் பெறுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சசிகலா நான்கு ஆண்டுகளில் ஒரு முறைகூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை. சிறையிலிருந்து வெளியே வரவிருக்கும் நிலையில், திடீரென அவருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் எனக் கூறப்படுவதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்'' என்று தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தஞ்சாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வெல்லப்போறான் விவசாயி என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தஞ்சை மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிடவிருக்கும் 35 வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று நடக்கிற இந்தக் கூட்டம் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மட்டும் இல்லை. நாங்கள் தேர்தல் வேலையை முன்பே தொடங்கிவிட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், சென்னையில் பெரிய அளவில் மாநாடு நடத்தி, மொத்த வேட்பாளர்களையும் அறிவிப்போம்.
மேலும், சரிசமமாக, பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படவிருக்கிறோம். 117 பெண்களும் ,117 ஆண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்படவிருக்கிறார்கள். நங்கள் பரப்புரைப் பயணத்தில் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து, தேர்தலில் நாம் எப்படியெல்லாம் பணி செய்யவிருக்கிறோம் என்பதை எடுத்துக் கூறிவருகிறோம். இந்தக் கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
எங்களிடம் பொருளாதார வலிமை கிடையாது என்பதால், இந்த ஓட்டத்தை முன்பே செய்து, மக்களைச் சந்தித்து, மீண்டும் மீண்டும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை திரும்பத் திரும்பப் பேசியும் வாக்குகளைச் சேகரிக்க விருக்கிறோம்.
நாங்கள் காசு கொடுத்து வாக்குக் கேட்பவர்கள் அல்ல. சிறந்த ஆட்சியைக் கொடுப்போம் என மக்களிடம் கூறி,வாக்குகளைப் பெறுவோம். அதனால், முன்கூட்டியே இந்தப் பயணத்தைத் தொடங்கிவிட்டோம்.
ஏற்கனவே, 74 மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவர்கூட சுடப்படவில்லை; கொல்லப்படவில்லை என பா.ஜ.கவினர் பேசுகின்றனர். ஆனாலும், இதை வெளியுறவுத்துறை, ராணுவத்துறை கண்டித்து இந்தச் செயல் நடக்கக் கூடாது எனக் கூறியிருக்கிறதா?.
நமக்கு, நட்பு நாடு எனச் சொல்லக்கூடிய இலங்கை, பல மீனவர்களைக் கொன்றிருக்கிறது. இதுபோல, வட இந்திய மீனவர்களுக்கு நடந்திருந்தால், இப்படி மத்திய அரசு விடுமா? ஆனால், தமிழன் உயிர் என்றால் இவர்களுக்கு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சசிகலா ஒரு முறைகூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை. சிறையிலிருந்து வெளியே வரும் நிலையில், திடீரென அவருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் என்று கூறுவதன் காரணம் என்னவென்று, வேறு மாதிரியாக யோசிக்கவைக்கிறது. எனவே, இதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்’’ என்று சீமான் தெரிவித்தார்.