பெங்களூரிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவின் வருகையை அதிமுகவில் இருக்கும் சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக!, வருக! என நெல்லை முழுவதும் போஸ்டர் ஒட்டிய, திருநெல்வேலி மாவட்டத்தின் எம்.ஜி.ஆர் மன்ற மாநகர் மாவட்ட இணை செயலாளர் சுப்பிரமணிய ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்தது அதிமுக.
திருச்சி மாநகர் பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக, 33 ஆண்டுகள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே 'வருக.. வருக..’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
திருச்சியை தொடர்ந்து, தேனியிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னராஜா சசிகலாவுக்கு ஆதரவாக, தமிழ் நாட்டை வழிநடத்த வருகைதரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர், தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே வருக..! வருக..! என்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.
சசிகலாவின் வருகைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய சுப்ரமணியராஜா, அண்ணாதுரை ஆகிய 2 பேரும் ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு அதிமுக நிர்வாகி சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போஸ்டர் ஒட்டியவர்களை மட்டும் நீக்கம் செய்து வரும் அதிமுக தலைமை, சசிகலாவுக்கு வாழ்த்து சொன்னவர்களையும், சசிகலாவின் வருகையை வரவேற்றவர்களையும் ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சசிகலாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டி வருவதால், இரட்டை தலைமையை விரும்புகிறதா அதிமுக? என்ற கேள்வியும் எழுத்தான் செய்கிறது.
சசிகலாவின் வருகைக்கு அமைச்சர் செல்லூர்ராஜூ, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வாழ்த்துசொன்ன ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் ஆகியோரை ஏன் இன்னமும் கட்சியிலிருந்து நீக்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்போர் எல்லோரையும் இப்படி தொடர்ந்து நீக்கிக்கொண்டே போனால் கட்சியின் நிலைமைதான் என்னவாகும்? போஸ்டர் ஒட்டியவர்கள் எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஓபிஎஸ் மகனே சசிகலாவுக்கு வாழ்த்து சொல்வதால், கட்சியை கைப்பற்றுவாரா சசிகலா? என்று அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.





