அரசு செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் கருப்பு பேட்ஜுவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் அரசு செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் முன்களப்பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்தனர். அத்துடன் கொரோனா காலத்தில் பல்வேறு செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். ஆனால், இப்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் முன்களப்பணியாளர்களை அரசு துச்சமாக நினைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், இதற்கு உதாரணமாக சமீபத்தில் தூய்மைப்பணியாளர்கள் 700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரை, தஞ்சை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிக செவிலியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.



