தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. பத்து மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதற்கு முன்பாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளுடன் வகுப்பு நடைபெறுகின்றன. இந்நிலையில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் உள்ளதாக கூறப்பட்டதை அமைச்சர் மறுத்தார். அந்த தகவல்கள் தவறானது. இரண்டு ஆசிரியர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
கொரோனா பரவல் காரணத்தால், கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அது போல இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கட்டாயம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும்.
மேலும் அவர், கொரோனா பரவல் காரணாமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். பொதுத் தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து முதலமைச்சரின் அனுமதி பெற்று பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
அதேபோல், ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது எளிமையான முறையில் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.