விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முழுமையாக நீங்கியுள்ளன. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து கொரோனா வார்டுக்கு அவரை மாற்றியுள்ளோம். அவர் எழுந்து நடக்கிறார். சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார். அவர் முழுவதும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வர ஒருவார காலம் தேவைப்படலாம்’ என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தவாறு சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலை செய்யுமாறு சசிகலாவின் வழக்கறிஞர்கள் சிறைத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கோரிக்கையை பரிசீலித்த சிறைத்துறை நிர்வாகம், சசிகலாவை விடுதலை செய்வதற்கான ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
இந்தநிலையில், சசிகலாவிடம் மருத்துவமனையில் இருந்தவாறே நாளை காலை 10 மணிக்கு விடுதலை செய்வதற்கான ஆணையில் சிறைத்துறை கையெழுத்து பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும். அவரது உடமைகளை வழக்கறிஞர் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் மூலம் சசிகலாவிடம் தெரிவித்தனர்.
முன்னதாக சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. அதன்படி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். சசிகலா விடுதலை செய்வது தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
குடியரசு தினமான இன்று பொது விடுமுறை என்பதால் அனைத்து சட்ட நடைமுறைகளையும் நேற்றே முடித்து விட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனைக்கே சென்று நாளை காலை 11 மணிக்கு சிறைத்துறையினர் சசிகலாவிடம் விடுதலைக்கான கையெழுத்தை பெற்று அதன் ஒரு நகலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதற்கு முன்னதாக சசிகலாவை விக்டோரியா மருத்துவ மனையிலிருந்து வேறு தனியார் மருத்துவமனைக்கு மாற்று மாறு உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் தனியார் மருத்துவமனைக்கு இணையாக விக்டோரியா மருத்துவமனையில் வசதிகள் இருப்பதாகவும் சிறை கைதிகள் போலீஸ் காவலில் வைத்து அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துவிட்டது.
விடுதலையான பிறகு விரும்புகிற மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.